Google Pay, Phonepe பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் - இனி கூடுதல் கட்டணமா?
ரூ.2000 க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் பணபரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாகி விட்டது. சாலை ஓர வண்டி கடைகளில் ரூ.5 க்கு பொருள் வாங்கினால் கூட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துமளவுக்கு நாடு வளர்ச்சியடைந்துள்ளது.
கையில் சரியான சில்லறை வைத்து பணம் செலுத்துவதை விட, மொபைல் போன் மூலம் QR Code ஐ ஸ்கேன் செய்து நொடி பொழுதில் பணம் செலுத்துவது எளிதாக உள்ளதால் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்கு மாறி விட்டனர்.
இடைத்தரகர்களுக்கு வரி
இந்நிலையில் தற்போது ரூ 2000க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு இடைத்தரகர்களிடம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Google Pay, Phonepe போன்ற நிறுவனங்கள் வங்கிகள் கிடையாது என்பதால், ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டியின் பரிந்துரைகள் படி, இந்த நிறுவனங்கள் இடைத்தரகர்களாகவே செயல்படுகின்றன. வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மொபைல் ரீச்சார்ஜ், மற்ற பில் கட்டணங்களுக்கு சேவை கட்டணங்களை இந்த நிறுவனங்கள் வசூலிக்கிறது. இந்நிலையில் இந்த வரி விதிக்கப்பட்டால் மற்ற பரிவர்த்தனைகளுக்கும் சேவை கட்டணம் வசூலிக்கபடலாம் என தெரிகிறது.
இதற்கு முன்னர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மக்களிடம் ஊக்குவிக்க, இந்த நிறுவனங்களிடம், ரூ.2000 குறைவான பரிவர்த்தனைக்கு வரி இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால், இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமும் வரி வசூலிக்காமல் சேவை செய்து வந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அனைவரும் மேற்கொள்வதால், இந்த வரியை அமல்படுத்த பரிசீலனை செய்து வருகிறது.