துவரம் பருப்பு விலை தாறுமாறு - மளிகை பொருட்களின் விலை கிடு கிடு உயர்வு

Chennai
By Thahir Jul 03, 2023 08:32 AM GMT
Report

துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளாதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உயர்ந்த தக்காளி விலை 

கடந்த அண்மை நாட்களாக தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. இதையடுத்து சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது தக்காளியின் விலை ரூ.5 குறைந்துள்ளது. இதனால் தக்காளி ஒரு கிலோ ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

grocery items rise in price

இதை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் கடும் உச்சத்தை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துவரம் பருப்பு விலை உயர்வு 

மளிகை பொருட்களின் விலை உயர்ந்திருப்பது குறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரி பாண்டியராஜன் பேசுகையில்,

தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

grocery items rise in price

குறிப்பாக துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.90 அளவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் விலை அதிகரிப்பு 

துவரம் பருப்பை பொறுத்தவரையில் மகாராஷ்டிரத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது.

இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.

அதே போல் மிளகாய் துாள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

இதனால் அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து, வண்டி - ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.