பாட்டி இறப்பு.. ஆடலும் பாடலுடன் கொண்டாடிய குடும்பம் - திருவிழா கோலமாக மாறிய சம்பவம்!
பாட்டியின் இறுதிசடங்கை திருவிழாவாக கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாட்டி இறப்பு..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (96). இவர்களுக்கு 2 மகன்கள், 4 மகள்கள். பேரன், பேத்திகள் மட்டுமே 78 பேர் உள்ளனர். இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
நாகம்மாள் தன் பிள்ளைகள், பேரன், பேத்திகள் மீது அளவு கடந்த பாசமும்,அன்பும் காடினார். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவர் குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறுவாராம். தனக்கு முதுமையாகிவிட்டதால், தான் இறக்கும்போது யாரும் வருத்தப்படக்கூடாது.
எப்படி குடும்பத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, அதே போல் நான் இறந்தாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். ஆடல், பாடல், மேளம் என்று ஒரு விழா போன்று எனது இறுதிச்சடங்கை நடத்த வேண்டும். துக்கவீடு போன்று அன்றைய தினம் இருக்கக்கூடாது.
இதுதான் என் கடைசி ஆசை என குடும்பத்தினரிடம் அவ்வப்போது சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நாகம்மாள் முன்தினம் இறந்தார். அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் அனைவரும் இணைந்து முடிவெடுத்தனர்.
திருவிழா
அதில், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்து கலைஞர்களை வரவழைத்தனர். மைக்செட் போட்டு திருவிழாவாக ஏற்பாடு செய்தனர். நாகம்மாளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கும்மி அடித்தனர். ஆடல் பாடல் ஒரு பக்கம் நடக்க மறுபுறம் நாகம்மாள் உடலுக்கு உறவினர்கள்,
குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சிறுவர் சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி என கொண்டாட்டங்கள் நடைபெற்று, நாகம்மாளின் இறுதி ஆசையை நிறைவேற்றினர்.
இது குறித்து சின்னப்பாலார்பட்டி கூறியதாவது, "வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் எப்போதும் முக்கியம் என மூதாட்டி நாகம்மாள் தன் குடும்பத்தினர் மட்டுமல்ல, கிராம மக்களிடமும் கூறி இருக்கிறார். அவரும் அவ்வாறான வாழ்க்கையை வாழ்ந்து 96 வயதில் இறந்துள்ளார்.
அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் இவ்வாறு செய்திருப்பது நினைக்கையில் ஆச்சரியமாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது" என்று தெரிவித்தனர்.