பிரிந்து சென்ற பேரனின் மனைவி - தாத்தா எடுத்த விபரீத முடிவு
தாராபுரத்தில் பேரனின் மனைவி பிரிந்து சென்றதால் தாத்தா விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள செலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 75). இவருக்கு ஈஸ்வரமூர்த்தி என்ற மகன் உள்ளார். அவரின் மகன் மகேஷ் அரவிந்த் (30). கடந்த ஜூன் 21 ம் தேதி, கரூர் பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை கொங்கூர் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகள் மகேஸ் அரவிந்தின் சொந்த ஊரான செலாம்பாளையத்தில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்யா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
வேறொரு திருமணம்
அவர் மீண்டும் வீட்டிற்கு வராததால் மகேஷ் அரவிந்த் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சத்யா ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பேரனின் திருமண வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்ற சோகத்தில், தனது தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் கருப்பசாமி. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பசாமியின் உடலை கைப்பற்றி, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பேரனின் மனைவி பிரிந்து சென்றதால் தாத்தா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.