பெண்ணின் கையை பிடித்து இழுப்பது குற்றமாகாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
உள்நோக்கமின்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமாகாது என மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கையை பிடித்து இழுத்தது
மதுரை, சோழவந்தானைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், கடந்த 2015ல் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்ட திருமணமாகாத மனநலம் பாதித்த ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக, பெண்ணின் தாய் போலீஸில் புகாரளித்தார்.
தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு முருகேசன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், 2018-ல் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது.
நீதிமன்ற தீர்ப்பு
இந்த தீர்ப்பை எதிர்த்து முருகேசன், மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “ஒரு ஆண், பெண்ணின் கையை பிடித்து இழுப்பது, அவளது கண்ணியத்தை பாதிக்கும் செயல்.
ஆனால் உள்நோக்கம் இன்றி நடந்தால், அது அவமதிப்பாகாது, குற்றம் ஆகாது. பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்ததாக ஆதாரம் இல்லை. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
சந்தேகத்தின் பலனை மனுதாரருக்கு வழங்கி, அவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது.” எனக் கூறி 3 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.