6 மாணவிகள் பாலியல் புகார்; ஆபாசப்படம் பார்க்க வைத்து டார்ச்சர் - கொடூர தமிழ் ஆசிரியர்!
மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அரசுப்பள்ளி தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்
பாலியல் வன்கொடுமை
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த மாணவி "தனது பள்ளியில் உள்ள தமிழாசிரியர் மகேஸ்வரன், அரசு விழா என்று கூறி விழுப்புரத்தில் உள்ள ஒரு விடுதிக்கு என்னை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் வகுப்பில் இருக்கும்போது செல்போனில் ஆபாச வீடியோக்கள் வைத்து என்னை பார்க்கச்சொல்லி வற்புறுத்தினார். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன்" என்று அந்த மாணவி கூறியுள்ளார்.
ஆசிரியர் கைது
இதனால் அதிர்ந்து போன அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரம் பள்ளியில் பரவியதையடுத்து, மேலும் ஐந்து மாணவிகள் தாங்களும் அந்த ஆசிரியரால் பாதிக்கப்பட்டோம் என்று புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளியில் குவிந்த அந்த மாணவிகளில் பெற்றோர்கள் ஆசிரியர் மகேஸ்வரனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.