கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை..?
கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்குமாறு ரவிக்குமார் எம்.பி., முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
கலப்புத் திருமணம்
ரவிக்குமார் எம்.பி., எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணை 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
உடல் ஊனமுற்ற ராணுவ வீரர், பணியில் உயிரிழந்த ராணுவ வீரரின் வாரிசுகள்; நிராதரவான விதவைகள் ஆகியோருக்கு அடுத்ததாக முன்னுரிமைப் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்துகொண்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பணி நியமனம்
முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த 2006-2011 காலகட்டத்தில் ஆசிரியர் பணி நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்டோர் 287 பேர் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அந்த அரசாணை முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து கடந்த 25.01.2021 அன்று அப்போதைய முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 08.06.2021 அன்று கடிதம் மூலம் இதைத் தங்களது மேலான கவனத்துக்கும் கொண்டுவந்தேன்.
திராவிட மாடல்
தற்போது முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கான முன்னுரிமை வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
தங்களது சீரிய தலைமையின்கீழ் செயல்படும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின்மீது நம்பிக்கை வைத்துக் காத்திருக்கும் ஆயிரக் கணக்கான கலப்புத் திருமண தம்பதிகள் இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தற்போது நடைபெறும் அரசு பணி அமர்த்தங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணையை செயல்படுத்தி சமுகநீதியைக் காத்திடுமாறு பணிவோடு வேண்டுகிறேன்” எனகூறப்பட்டுள்ளது.