ஸ்ரீமதி மரணம்... தாய்க்கு அரசு வேலை? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
இறந்த மாணவியின் தாய்க்கு அரசு வேலை வழக்குவது தொடர்பாகவும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
ஸ்ரீமதி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி வழங்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த வாகனங்கள், மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டது.
அமைச்சர்கள் ஆய்வு
இந்நிலையில் அந்த மாணவியின் விவகாரத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பள்ளியை நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆங்கு கூடியிருந்த பெற்றோர்கள் இந்த பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மற்றும் தங்கள் பிள்ளைகளின் சான்றிதழை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீதிமன்றத்தில் வழக்கு காரணமாக மாணவியின் பெற்றோர்களை சந்திக்க முடியவில்லை.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பள்ளியை ஆய்வு செய்தோம், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் மொத்தமாக எரிந்து சாம்பலாகி விட்டன, இந்நிலையில் அருகில் உள்ள தனியார் பள்ளிகள் உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளன.
சான்றிதழ்கள்
ஒட்டுமொத்தமாக பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டுள்ளது, நாற்காலிகள் அனைத்தும் தூக்கி செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளியின் நிலைமை, மாணவர்களின் பெற்றோர்களின் மனநிலை என்ன என்பது குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறியுள்ளோம்.
சான்றிதழ் எரிந்ததால் பலர் அழுவதை பார்க்க முடிந்தது, மாற்றுச் சான்றிதழ் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன. வருவாய்த்துறையின் மூலம் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்து கொடுப்போம்.
தாய்க்கு அரசு பணி
மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க கற்றல் இடைவெளி ஏற்படாமல் இருப்பது குறித்து முதல்வருக்கு அறிக்கை வழங்க உள்ளோம். இந்நிலையில் இறந்த மாணவியின் தாய் எம் .காம் படித்துள்ளார்,
எனவே அவர் கேட்டுள்ள படி அவருக்கு அரசு பணி வழங்குவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என கூறியுள்ளார்.