அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..!!
சென்னை மழையினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அரசு பாடம் கற்றிருக்கவேண்டுமே என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் ஆறுதல்
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளையும் அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதுமான உதவிகள் வழங்கப்படவில்லை என்று கூறிமக்களை அரசு அதிகாரிகள் நேரில் சந்திக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்லை
தொடர்ந்து பேசிய அவர், மழை - வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்த 8 பேருக்கும் தலா 10 லட்ச ரூபாய் வழங்கவேண்டும் என வலியுறுத்தி, சேதமடைந்த பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அரசு மருத்துவமனைகளில் நீர் தேங்கியிருக்கும் நிலையில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பெருமழை குறித்து வானிலை ஆய்வு மையம் கடந்த 14-ந்தேதியை எச்சரிக்கை விடுத்தது, ஆனால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.