அரசு பேருந்தில் மோசடி.. போலி டிக்கெட்டை விற்ற நடத்துனர் - அதிரடி காட்டிய செக்கர்!
பேருந்து நடத்துனர் போலி டிக்கெட்டுகளை விற்று மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்து
நேற்று அதிகாலையில் சேலத்தில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் நேரு என்பவர் நடத்துநராக செயல்பட்டு வந்தார். அப்போது திடீரென டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் பயணிகளிடம் இருந்த டிக்கெட்டுகளை பரிசோதனை செய்ததில் அவை அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் என்று தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் நடத்துனரிடம் கேள்வி எழுப்பினர்.
அதிகாரிகள் அதிரடி
இந்நிலையில், அந்த நடத்துனர் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை, அதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது பையை வாங்கி பார்த்தபோது, பொதுமக்களிடம் ஏற்கெனவே விற்பனை செய்த பழைய டிக்கெட்டுகளை அவர்களிடமிருந்து வாங்கி, புதிய பயணிகளுக்கு பழைய டிக்கெட்டுகளை கொடுத்தது தெரியவந்தது.
அந்த நடத்துனரை பணியில் இருந்த விடுவித்த டிக்கெட் பரிசோதகர்கள், மாற்று நடத்துநரை வரவழைத்து பேருந்தை இயக்கினர். இந்த புகாரை டிக்கெட் பரிசோதகர்கள் சேலம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு கொடுத்த நிலையில், நடத்துநர் நேரு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.