ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல - விளாசிய நீதிபதி!
வழக்குகள் தொடருவதற்கு முன்னரே நிலுவை மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அரசு வழக்கு
பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளார். இதனால் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி அரசு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கானது இன்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப் மாநில சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. பஞ்சாப் சட்டசபையை கூட்டுவதற்கும் கூட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முட்டுக்கட்டையாக உள்ளார் என பஞ்சாப் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து பேசிய நீதிபதி சந்திரசூட் "ஆளுநர்கள் என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்னரே ஆளுநர் செயல்பட்டிருக்க வேண்டும்.
நீதிபதி உத்தரவு
மசோதாக்களுக்கு கூட ஒப்புதல் தர வேண்டும் என்பதற்காக மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டுமா? அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும்.
இதேபோல தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகளும் வழக்கு தொடர்ந்திருக்கின்றன. பஞ்சாப் மாநில அரசின் 7 நிலுவை மசோதாக்கள் மீதான நிலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மாநில அரசைப் போலவே தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநில அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.