காவியின் பலம் கறுப்பால் மறையக்கூடாது - தமிழிசை கருத்து

Smt Tamilisai Soundararajan Tamil nadu Kanyakumari
By Sumathi Oct 17, 2022 04:25 AM GMT
Report

காவியின் பலன் என்றும் கறுப்பினால் அழிந்துவிடக் கூடாது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

 தமிழிசை செளந்தரராஜன் 

கன்னியாகுமரி, தக்கலையில் வெள்ளி மலை ஹிந்து தர்ம வித்யா பீடம் சார்பில் நடைபெற்ற 33 வது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42 வது சமய வகுப்பு மாணவர் மாநாடு நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார்.

காவியின் பலம் கறுப்பால் மறையக்கூடாது - தமிழிசை கருத்து | Governor Tamilisai Soundararajan About Hindu

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் ஹிந்து தர்மம் குறித்து பேசுவதும், ஆன்மீகத்தை குறித்து பேசுவதும் ஏதோ தவறான ஒரு நிகழ்வு போலவும் பேசக்கூடாத ஒன்றை பேசுவது போலவும் மாயத்தோற்றம் இருக்கிறது. இந்த மாயத்தோற்றம் நிச்சயமாக அகற்றப்பட வேண்டும்.

ஆன்மிகம் அடிப்படை

குமரியில் நம் பலத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம். இதே பலம் மற்ற இடங்களிலும் வரவேண்டும். ஆன்மிகம் தான் நம் அடிப்படை. ஆன்மிகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை, தமிழை வேறு யாரெல்லாமோ வளர்த்தார்கள் என தெரிவிப்பது தவறு.

ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழை வளர்த்தார்கள். உயிரையும் உடலையும் போல் தமிழகத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. அவநம்பிக்கை என கூறிவிட்டு சிலபேர் வீட்டில் உள்ளவர்களை வைத்து சாமி கும்பிட வைப்பார்கள்.

காவியின் பலம்

மறைமுகமாக சாமி கும்பிடுகிறார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஆனால் காவியின் பலம் கறுப்பினால் மறைந்துவிடக்கூடாது. ஆளுநர் இப்படி பேசலாமா என கேள்வி கேட்பர். ஆளுநராக இருந்தாலும் நான் தமிழகத்தின் மகள். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் ரம்ஜான் கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்வார்.

ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார். தமிழகத்தில் தானே இருக்கிறீர்கள். அந்த பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லவேண்டியதுதானே என கேட்டேன். ஆனால் பக்கத்து வீட்டு அண்ணனுக்கு அது தெரியமாட்டேங்குது. ஒருவரின் எழுச்சி மற்றவரின் வீழ்ச்சி அல்ல. எல்லோரின் நம்பிக்கையும் மதிக்கப்படவேண்டும்.

பெரும்பான்மையினரின் நம்பிக்கை மட்டும் அவமதிக்கப்படும்போது எழுச்சிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.