ராமர், பாரதம், தமிழ்நாடு மூன்றையும் யாராலும் பிரிக்க முடியாது - ஆளுநர் ரவி சூளுரை
வரும் காலங்களில் இந்தியா முழுவதும் ராமராஜ்ஜியமாக மாற அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார்.
ஆளுநர் ரவி
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள நாரத கானா சபையில் சென்னையில் அயோத்தியா கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா கலந்துகொண்டனர்.
ராம ராஜ்ஜியம்
அதில் ஆளுநர் ரவி பேசுகையில், ராம ராஜ்ஜியத்தியின் அஸ்திவாரம் அமைத்த இந்த நாள் மிகவும் முக்கிய நாளாகும். பாரத நாடு ராமர் இல்லாமல் இல்லை அவர் எல்லா இடங்களிலும் உள்ளார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ராமர், சீதையை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார்.
ராமர், பாரதம், தமிழ்நாடு இவை மூன்றையும் எவராலும் பிரிக்க முடியாது. இலக்கியம், இசை, நடனம் இவை அனைத்திலும் ராமர் உள்ளார். 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ராமரின் தூதராக நாட்டிற்கு தன்னை அர்ப்பணித்து உழைத்து வருகின்றார். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவை யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் தற்போது உலகில் நடைபெறும் பல மாற்றங்களின் மைய புள்ளியாக இந்தியா உள்ளது. ராம ராஜ்ஜியத்தின் தொடக்கத்தை பிரதமர் மோடி துவங்கியுள்ளார்.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ராம ராஜ்ஜியமாக மாற அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். சுதந்திரத்திற்கு பின்பும் மொழி, மதம் அடிப்படையில் தொடர்ந்து சமுகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர் என்றுத் தெரிவித்துள்ளார்.