காந்தியும் சாதி தலைவராகியிருப்பார்..தமிழகத்தில் பிறந்திருந்தால்!! ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!!
இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரையும் சாதி தலைவராக மாற்றியிருப்பார்கள் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி உரை
திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழகம் புனித பூமி என குறிப்பிட்டு, இங்கு ஆரியம் - திராவிடம் கிடையாது என்றார். இந்தியாவை பிரித்தாளுவதற்காகவே கால்டுவெல் அனுப்பினார்கள் என்ற ஆளுநர் சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்றவர்கள் தமிழகத்தில் தான் உள்ளார்கள் என்றும் விமர்சித்தார்.
காந்தியும் சாதி தலைவராகியிருப்பார்
அக்டோபர் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மக்கள் இயல்பாக நடமாடமுடியாத வகையில் சிவகங்கையில் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
'
அரசியல் கட்சி தலைவரின் நினைவு தினத்தில் அரசால் இப்படி தடை போட முடியுமா? என்று வினவிய ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவிலிருந்து அகற்றுவதற்கு தமிழக முயற்சிக்கிறது என்றும் குறைகூறினார்.
காந்தி உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி, தியாகிகளை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்கள ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.