Thursday, Feb 27, 2025

அமலாக்கத்துறை சோதனைக்கு முன்னரே அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க சொன்ன ஆளுநர்..!

M K Stalin V. Senthil Balaji R. N. Ravi Governor of Tamil Nadu K. Ponmudy
By Thahir 2 years ago
Report

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்க சொன்ன ஆளுநர் 

இது குறித்து  அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 31-ம் தேதி முதல்வர் ஜப்பான் சென்று திரும்பியபோது, முதல்வருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ள காரணத்தால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருந்தார்.

governor asked to remove Senthil Balaji minister

அந்த கடிதத்துக்கு மறுநாளே முதல்வர் பதில் கடிதம் அனுப்பினார், அதில் வழக்கு உள்ள காரணத்தினால் அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என கூறியிருந்தார்.

அப்படியென்றால் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீதான வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் நீக்கப்பட்டாரா, 78 மத்திய அமைச்சர்களில் 33 அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளதாக செய்தி வெளியானது. வழக்கு இருப்பவர்களை நீக்க வேண்டுமானால் பாஜக அரசுக்குதான் ஆளுநர் கடிதம் அனுப்ப வேண்டும்.

குறிப்பாக ஆளுநர் கடிதம் எழுதியபோது, அமைச்சர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. வழக்கு மட்டுமே நிலுவையில் இருந்தது.

அப்போதே செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் கடிதம் எழுதினார். இதற்கான பின்னணி என்ன? அவர் பாஜக பிரமுகராக செயல்படுகிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் வகித்து வந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்க இருக்கிறோம் என முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

முதல்வர் சொல்பவரைத் தான் அமைச்சராக ஆளுநர் நியமிப்பார். அதுதான் அவரது வேலை. அவரைக் கேட்டுதான் துறைகளை மாற்ற வேண்டும் என்பதில்லை. துறைகளை மாற்றியிருப்பதாக ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன்படி தெரிவித்தோம். அரசமைப்புச் சட்டம் தெரிந்த ஆளுநராக இருந்திருந்தால், அவர் இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் ஆளுநரோ, ‘‘முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் தவறாக வழிநடத்துவதாகவும், தவறானது’’ எனவும் கூறி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இது மிகவும் தவறானது.

ஆளுநர் அரசின் அதிகாரங்களில் தலையிடுகிறார் - பொன்முடி 

இதைத் தொடர்ந்து இந்த காரணத்துக்காக நான் இவரை நீக்குகிறேன் எனவும், இந்த கடிதத்தை ஆளுநர் ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளோம்.

governor asked to remove Senthil Balaji minister

அவர் ஏற்றுக் கொள்வார் என நினைக்கிறோம். பாஜகவின் முகவராக ஆளுநர் செயல்படுகிறார் என்பது கடிதங்கள் மூலமாக தெரிகிறது.

அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்படும் முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஆனால் ஆளுநரோ அரசின் அதிகாரங்களில் தலையிடுகிறார். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.