அரசு பஸ்சை திருடி சென்ற இளைஞர் - ஷாக்கான போக்குவரத்து கழகம்
அரசு பேருந்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து மாயம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து வழக்கம் போல் நேற்று இரவு கரியசோலை என்ற இடத்திற்கு, அரசு பஸ் சென்றுள்ளது. இரவு 9 மணிக்கு வழக்கமாக நிறுத்தும் கரியசோலை பஸ் நிறுத்தத்தில், நிறுத்தி விட்டு, அருகே உள்ள அறையில் ஓட்டுநர் பிரசன்னகுமாரும், நடத்துநர் நாகேந்திரனும் டிரைவரும் துாங்கச்சென்றனர்.
காலை 6 மணிக்கு ஓட்டுநரும், நடத்துநரும் வந்து பார்த்தபோது பஸ்ஸை காணவில்லை. அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தில் பேருந்தை தேடி அலைந்தனர். மேலும் வழியில் தென்பட்டவர்களிடம் எல்லாம் விசாரித்தனர்.
பேருந்து மீட்பு
அப்போது அந்த வழியில் வந்த சிலர், 3 கிலோ மீட்டர் தொலைவில், தேவாலா செல்லும் சாலையில் டான்டீ சரக எண் 5க்குட்பட்ட பகுதியில், சாலையோர தடுப்பு சுவரில் இடித்தபடி, பேருந்து நிற்பதாக தெரிவித்தனர்.
உடனடியாக ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்த காவல் துறையினர், போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அருள்கண்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள் அங்கு வந்தனர். இந்த சம்பவம் பற்றி நெலாக்கோட்டை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், தேவாலா வாழவயல் பகுதியை ரிஷால்(20) என்பவர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நேற்று இரவு தேவாலா ஹட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமாரின் இரு சக்கர வாகனத்தை திருடிய ரிஷால், வழியில் பஸ் நிற்பதை பார்த்துள்ளார்.
இவ்வளவு பெரிய பேருந்து இருக்கும் போது இரு சக்கர வாகனம் எதற்கு என கருதி, திருடிய இரு சக்கர வாகனத்தை அங்கே நிறுத்திவிட்டு, பஸ்சை ஒட்டிக்கொண்டு சென்று விட்டார். ஆனால் சற்று துாரம் சென்ற பிறகு, பேருந்து சரியாக இயங்காமல் இருந்துள்ளது. இதற்கு மேல் ஓட்டிச்சென்றால் விபத்தில் சிக்கி விடுவோம் என பயந்து தடுப்புச்சுவரில் மோதி பேருந்தை நிறுத்தி விட்டார். இதனையடுத்து ரிஷாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.