திருப்பதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி; 100 கோடி சுருட்டிய நபர் - வெளியான அதிர்ச்சி தகவல்
திருப்பதி உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஒரு நபர் 100 கோடி சுருட்டிய விசயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
ஆந்திராவில் அமைந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு உள்ள கோவிலாக உள்ளது. இதன் சொத்து மதிப்பு 2022 ம் ஆண்டு படி 2 லட்சம் கோடியாகும். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையே தினமும் சராசரியாக 4-5 கோடி வரும். இவர்கள் பணமாகவும், தங்கம், வைரம் தங்கம், வெள்ளி, வைர வைடூரிய நகைகளாகவும், வெளிநாட்டு பணத்தையும் காணிக்கையாக அளிக்கின்றனர். 2023 ம் ஆண்டு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1398 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
திருமலை பெரிய ஜீயர் மடம்
இந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் ரூ100 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த ரவிகுமார் என்பவர், திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் ரவிக்குமாரை, 20 ஆண்டுகளாக திருப்பதி உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணியாளர்களில் ஒருவராக திருப்பதி தேவஸ்தானம் நியமித்தது.
அவரின் நடவடிக்கையை கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்பொழுது மலக்குடல் மூலம் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இப்படி பணத்தை கடத்தி 100 கோடிக்கு சொத்து வாங்கி குவித்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
லோக் அதாலத்
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என்பதால், லோக் அதாலத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றுள்ளது தேவஸ்தானம். அப்போது, திருடிய பணத்தை கொண்டு வாங்கிய சொத்துகளை, தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கியுள்ளனர். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் ஆந்திர மேல்சபை உறுப்பினர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஆந்திர சட்ட மேல்சபையில் இந்த முறைகேடு குறித்து அமைச்சர் பேசியதை இத்தனை காலமாக வெளியே தெரியாமல் இருந்த இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.