கூகுள் மேப்பை நம்பி குறுக்கு வழியில் சென்ற சுற்றுலா பயணிகள் - சிக்கிய சொகுசு கார்!
கூகுள் மேப் உதவியுடன் சென்று ஆபத்தான படிக்கட்டு நடுவே சிக்கிய கார் நீண்ட நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
கூகுள் மேப்
நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 25-ம் தேதி முதல் தொடர் விடுமுறையால் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
மலை மாவட்டம் என்பதால் இங்கு வரும் சில சுற்றுலா பயணிகள் கூகுள் மேப்பை பயன்படுத்துகின்றனர். அதனால் சில நேரங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.
அந்த வகையில் ஊட்டியில் சுற்றுலாவை முடித்துக் கொண்ட கர்நாடக மாநில இளைஞர்கள், தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
சிக்கிய கார்
அவர்கள் கூடலூர் அருகே வரும் போது போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டதால், கூகுள் மேப்பில் மாற்றுப்பாதையை தேர்வு செய்துள்ளனர்.
மேப் காட்டிய பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, சிறிது நேரத்தில் அந்த வாகனம் நடைபாதை படிக்கட்டில் சிக்கியுள்ளது. இதனையறிந்த ஓட்டுநர் காரை சாதுரியமாக படிக்கட்டுகளில் நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் சில மணி நேரங்கள் போராடி வாகனத்தை மீட்டுள்ளனர்.