மோடி குறித்து தவறாக பதிலளித்த ஜெமினி AI -மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட Google!
ஜெமினி ஏ.ஐ-யால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து மத்திய அரசிடம் மன்னிப்பு கோரியுள்ளது கூகுள் நிறுவனம்.
ஜெமினி ஏ.ஐ
கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி ஏ.ஐ அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்தித்து வந்தது. இதனிடையே இந்திய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு தவறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பதிலளித்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கூகுள் நிறுவனம் மத்திய அரசிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் "பிரதமர் மோடி பற்றி ஜெமினி அளித்த ஆதாரமற்ற தகவல்களுக்கு விளக்கமளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி இருந்தோம்.
அரசு அறிவிப்பு
இதையடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியதுடன், தனது இயங்குதளம் நம்பகத்தன்மையற்றது என்று தெரிவித்தது"என்று கூறியுள்ளார். கூகுள் ஜெமினி செயல்பாட்டைத் தொடர்ந்து ஏ.ஐ தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி பெறவேண்டியது அவசியம் என மத்திய அரசு அறிவித்தது.
மேலும், ஏ.ஐ தளங்களுக்கான சோதனைக் களமாக இந்தியாவைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.