12 ஆண்டுகால கடத்தல் வழக்கு - கோகுல்ராஜ் கொலை குற்றவாளி யுவராஜ் விடுதலை
கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல் வழக்கு
சேலம், ஓமலூரைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ். இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நட்புடன் பழகி வந்தார். கடந்த 2015, ஜூன் 23ஆம் தேதி கோகுல்ராஜ் வீட்டிற்கு வராததால், பெற்றோர் தேடி வந்தனர்.
அப்போது தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். தொடர் விசாரணையில் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
யுவராஜ் விடுதலை
பின் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் யுவராஜ்-க்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. எனவே, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2013ஆம் ஆண்டு ஹேமலதா - பாலாஜி ஆகியோர் கடத்தப்பட்ட வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக சாட்சி அளிக்க வேண்டியவர்கள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர்.
இதனால் யுவராஜ் உள்ளிட்ட 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், கோகுல்ராஜ் கொலை வழக்கில், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.