சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உண்மையை கூற 2வார கால அவகாசம்!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டிருந்தது. அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை ஆஜர்படுத்தியது.
வழக்கு விசாரணையின்போது, பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி வாக்குமூலம் அளித்தார். அதாவது, வீடியோவில் உள்ள பெண் அருகில் இருக்கும் பையன் யார் என கேட்டதற்கு கோகுல்ராஜ் போல தெரிவதாக சுவாதி பதிலளித்தார்.
உண்மை கூற வாய்ப்பு
இதுபோன்று சிசிடிவி காட்சியில் இருக்கும் பெண் யார் என 3 முறை நீதிபதிகள் கேட்டதற்கு, யாரென தெரியவில்லை என சுவாதி கூறினார். கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு தெரியாது என தெரிவித்த சுவாதி, சிசிடிவி பதிவில் க்ளோசப் காட்சியை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறினார் சுவாதி என கூறப்படுகிறது.
வாக்குமூலம் பொய் என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் ஆஜரானார். அப்போது சுவாதி பொய்யான சாட்சி அளித்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், உண்மையை கூற வாய்ப்பளிக்க 2 வாரம் அளிக்கப்பட்டதாக ஒத்திவைத்தனர்.