வெளிநாட்டில் படிக்க ஆசையா? சிங்கப்பூருக்கு குடும்பத்தினருடன் சென்று படிக்கலாம்
சிங்கப்பூருக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு அட்டகாசமான சலுகை ஒன்றை அந்த நாட்டு அரசாங்கம் அளித்துள்ளது.
வெளிநாட்டு கல்வி
இந்தியாவில் கல்வி பெற நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் பலருக்கு வெளிநாடு சென்று படித்து பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு.
வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க அந்தந்த நாடுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது சிங்கப்பூர் அரசாங்கமும் வெளிநாடு மாணவர்களை ஈர்க்கும் முயற்சியாக புதிய கொள்கையை உருவாக்கியுள்ளது.
LTVP பாஸ்
சிங்கப்பூரில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் உடன் ஒரு பாதுகாவலரை அழைத்து வரலாம். மாணவர்கள் குடும்பத்தினருடன் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்துலாம். கல்விக்கு குடும்ப ஆதரவின் முக்கியத்துவம் அவசியம் என சிங்கப்பூர் அரசு கருதுகிறது.
முன்னதாக, தாய் அல்லது பாட்டி போன்ற பெண் பாதுகாவலர்களுக்கு மட்டுமே அந்த அனுமதி கிடைத்து வந்தது. தற்போது, தந்தை, தாத்தா உட்பட ஆண் பாதுகாவலர்கள் மாணவர்களுடன் சேர்ந்து நீண்ட கால விசிட் பாஸ்களுக்கு(LTVP) விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு மாணவரும் ஒரு பாதுகாவலருடன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி இன்னும் மாற்றப்படவில்லை.
இந்த LTVP பாஸ் தான் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்க அனுமதிக்கும். விண்ணப்பிக்கும்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், 6 வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். சில வேளைகளில் கூடுதல் நேரம் தேவைப்படலாம். விண்ணப்பத்தின் மீதான முடிவு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.