போலீஸ் பாதுகாப்புடன் ஆடு மேய்க்கும் விவசாயி - காரணம் என்ன?
மணல் கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்த காரணத்தால் போலீஸ் பாதுகாப்புடன் விவசாயி ஒருவர் ஆடு மேய்த்து வருகிறார்.
மணல் கொள்ளை குறித்து விவசாயி புகார்
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தில் விஏஓவாக இருந்த லூர்து பிரான்சிஸ் என்பவரை சமீபத்தில் மணல் கொள்ளையர்கள் சரமாரியாக வெட்டி வீழ்த்தினர்.
ஆற்றின் ஒருபக்கம் முறப்பநாடு என்றால் அதன் மறுபக்கம் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அகரம் கிராமம். இங்கு வசிக்கும் சிறு விவசாயி தான் பாலகிருஷ்ணன்.

இவர் தான் வாழும் ஊரிலேயே 1 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதோடு ஆடுகள் வளர்ப்பு பணிகளையும் செய்து வருகிறார்.
இவர் கடந்த 2019 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வல்லநாடு ஊராட்சி 1 வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார்.
அதே ஆண்டு இறுதியில் அகரம் ஊரின் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதாக கூறி கரை பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து தனது வார்டு மக்கள் புகாரை பெற்று முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இவர் 200 கும் மேற்பட்ட மனுக்களை உயர் அதிகாரிகளிடம் அளித்துள்ளார், அப்பொழுதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொள்ளையர்கள் மிரட்டல்
தொடர்ந்து, மணல் கொள்ளையர்கள் இவரை மிரட்டியும், அச்சுறுத்தியும் வந்தனர். இதனால் இவர் மதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.
மதுரை கிளை நீதிமன்றத்தில் கடந்த 14.10.2020 ல் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி வழக்கு விசாரணை நடத்தினர்.
இதன் அடுத்த கட்ட விசாரணையில் 19.11.2020 அன்று மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இது கூறித்து அவர், “ முன்பெல்லாம் ஒன்றரை பனை உயரத்திற்கு ஆற்றங்கரையில் மணல் நிரம்பி இருக்கும். பாலைவனத்திற்கு நடுவே தண்ணீர் செல்வது போல தாமிரபரணி அமைந்திருந்தது. ஆனால், தற்போது முற்றிலுமாக மணல் அள்ளப்பட்டு விட்டது.
கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மண்ணையும் இரவு நேரங்களில் தொடர்ந்து அள்ளி வருகின்றனர். மணல் கொள்ளையில் இளைஞர்களே அதிகம் ஈடுபடுகிறார்கள். அதிகமான லாபம் கிடைக்கிறது.
407 மாடல் வேனில் மணல் கடத்துகின்றனர். இதற்கு வருவாய்த் துறை, காவல் துறையில் ஒரு சில அதிகாரிகள் லாப நோக்கத்துடன் உடந்தையாக இருக்கின்றனர்.
நேர்மையான அதிகாரிகள் கூறுவதை கீழ் இருக்கும் அதிகாரிகள் கேட்பதில்லை. இதனிடையே போலீசார் எந்நேரமும் கூடவே பாதுகாப்பு அளிக்கிறார்கள், ஒரு நல்ல விஷேசத்திற்கு கூட அவர்களுடன் செல்லவேண்டி இருக்கிறது.
அதனால் இந்த நிலை நீடிக்க கூடாது, சம்பந்தப்பட்ட நபர்களை விரைவில் போலீசார் கைது செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.