5 வயது சிறுமி படுகாயம் - ஆசையாய் வளர்த்த செல்ல நாய்கள் செய்த கொடூரம்!
5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி படுகாயம்
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்ஷாவும் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ரகு தனது உறவினர் ஒருவரின் இறப்பு காரணமாக விழுப்புரம் சென்றுள்ளார்.
இதற்கிடையில் மாலை நேரத்தில் பூங்காவிற்கு அருகில் இருக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களுடன் வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை இரு நாய்களும் கடித்துள்ளன.
செல்ல நாய்கள்
குழந்தை அலறும் சத்தத்தை கேட்டு ஓடி வந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றபோது, அவரையும் நாய்கள் கடித்துள்ளது. இந்த சூழலில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புகழேந்தியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதில், காயமடைந்த குழந்தைக்கு தனது செலவில் சிகிச்சை அளிப்பதாக புகழேந்தி கூறியுள்ளார். இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.