கல்லூரி கனவு; சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு - உயிரை மாய்த்த மாணவி!
சாதி சான்றிதழ் தராததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாதி சான்றிதழ்
திருவண்ணாமலை, எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தை இறந்துவிட்டதால் தாயுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
எனவே, கல்லூரி கனவுடன் பன்னியாண்டி சமுதாயத்தை சேர்ந்த இவர் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், வருவாய் துறையிடம் எஸ்.சி சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், அவருக்கு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மாணவி தற்கொலை
இதனால் மனமுடைந்த மாணவி பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பன்னியாண்டி சங்கத்தைச் சேர்ந்தவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி முன் திரண்டனர்.
வருவாய் துறையை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.