போலி சாதி சான்றிதழ் வழக்கு: தமிழ் பட நடிகைக்கு ரூ.2 லட்சம் அபராதம்...
போலி சாதி சான்றிதழ் அளித்து அமராவதி மக்களவை தனித்தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை நவ்னீத் கவுருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழில் அரசாங்கம் மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த நவ்னீத் கவுர் கடந்த 2011 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தின் சுயேட்சை எம்.எல்.ஏ., ரவி ராணாவை திருமணம் செய்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து அரசியலில் குதித்த அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அமராவதி மக்களவை தனித்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் 2019 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாகவே நின்று வெற்றி பெற்று எம்.பி.யானார்.
ஆனால் தேர்தலில் பட்டியலினத்தவர் என்று போலியாக சாதி சான்றிதழ் காட்டி நவ்னீத் வெற்றி பெற்றதாக சிவசேனா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ராவ் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நவ்னீத் கவுரின் சாதி சான்றிதழை ரத்து செய்ததோடு, அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தனர். மேலும், 6 வாரங்களுக்குள் அனைத்து சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தை அணுக போவதாக நடிகை நவ்னீத் கவுர் கூறியுள்ளார்.