ஆன்லைனில் வாங்கிய கேக்; பறிபோன 10 வயது சிறுமியின் உயிர் - என்ன நடந்தது?
கேக் சாப்பிட்ட பின் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் கேக்
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியை சேர்ந்தவர் மான்வி (10). இந்த சிறுமியின் 10-வது பிறந்தநாளை கடந்த 24-ம் தேதி அவரது குடும்பத்தினர் கொண்டாடினர். அதற்காக பாட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஆன்லைன் மூலமாக கேக் ஆர்டர் செய்துள்ளனர்.
இதனையடுத்து கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மான்வி, அதனை குடும்பத்தினருக்கு ஊட்டி விட்டுள்ளார். பின்னர் அவரும் கேக் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுமிக்கு தொண்டை வறண்டு தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் மாறி மாறி வாந்தி எடுத்துள்ளார்.
சிறுமி பலி
இது போன்று பாதிப்பு அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் மான்வியை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த சிறுமியின் குடும்பத்தினர், ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் கெட்டுப் போனதாலும், அதை சாப்பிட்டதுமே சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றிய போலீசார், அதனை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.