கவர்னர் மாளிகைக்கு மனு கொடுக்க வந்த மாணவியால் பரபரப்பு - என்ன நடந்தது?
திமுக பிரமுகர் மீது புகார் கொடுக்க வந்த அரக்கோணம் கல்லூரி மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம் மாணவி விவகாரம்
வேலூர், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஒருவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தெய்வச்செயலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், சில முக்கிய திமுக கட்சி நிர்வாகளுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி கொடுமை செய்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே அவரது பெற்றோர் அவரை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். பின், மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் தெய்வச்செயல் அவரது முதல் மனைவி மூலம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.
பரபரப்பு சம்பவம்
எனவே, தனது வழக்கில் முறையான விசாரணை நடைபெற வில்லை என்றும், தனக்கு நீதி வேண்டும், எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுத்தி ஆளுநரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அந்த மாணவி வந்திருந்தார். அப்போது, ஆளுநர் சென்னையில் இல்லாததால்,
ஆன்லைன் மூலம் புகார் கொடுக்க மாணவியை கிண்டியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். ஆனால், கிண்டி ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி அதே ஆட்டோவில் பெண் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
எனவே போலீசாருடன் வாக்குவாதம் செய்த மாணவி, தனது தாயாருடன் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்த மாணவி, பாதிக்கப்பட்ட என்னையே போலீசார் குற்றவாளி போல நடத்துகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டோம் என்கின்றனர்.
ஆனால், முதல் தகவல் அறிக்கையை கொடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட தெய்வசெயலை அழைத்து விசாரிக்காமல், புகார் கொடுத்த என்னை சுற்றி அதிகாரிகள் அமர்ந்து கொண்டு, தேவையற்ற கேள்விகளை கேட்டு அலைக்கழிக்கின்றனர். எனவே, வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, நீதி பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.