பல ஆண்டு கோரிக்கை; வந்தது தனி நல வாரியம் - ஸ்விகி, ஊபர் ஊழியர்களுக்கு குட் நியூஸ்
இணைய சேவை பணியாளர்களான அமைப்புச்சாரா (கிக் ) தொழிலாளர்களுக்கான தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
'கிக்' பணியாளர்கள்
உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம், இணைய வழி புக்கிங் டாக்ஸி ஓட்டும் 'கிக்' பணியாளர்கள் தங்களை முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக மாற்றி, தொழிலாளர் நலத்துறையின் கீழ் அடிப்படை சலுகைகளை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில், உணவு விநியோகம், மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் விநியோகங்கள்,
தனி நல வாரியம்
இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி கிக் (Gig) முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு விநியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில்,
அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக. 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர் நல வாரியம் (Tamil Nadu Platform Based Gig Workers’ Welfare Board) எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் (Gig) தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.