நடுக்கடலில் நீரை உறிஞ்சிய ராட்சத மேகம் - அரண்டு போன மீனவர்கள்!
ராட்சத மேகங்கள் கடல் நீரை உறிஞ்சி குடிக்கும் அரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அரிய நிகழ்வு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலம்பாறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். சுமார் 5 கி.மீ. தூரம் வரை அவர்கள் கடலுக்குள் சென்றிருந்த போது திடீரென வானம் இருண்டுள்ளது.
தொடர்ந்து, வானில் ஒன்று திரண்ட மிகப்பெரிய ராட்சத மேகங்கள் ஒன்றுபோல கடலில் இறங்கியுள்ளது. அடுத்த நொடியே ஒரு பெரிய சுழலாக உருவெடுத்து, கடல் நீரை உறிஞ்சியுள்ளது. இதனைக் கண்டு அரண்டு போன மீனவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
டோர்னடோ
சுமார் அரை மணி நேரம் கடல் நீரை உறிஞ்சிய மேகங்கள், பின்னர் கலைந்து சென்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து துறைமுக அதிகாரி, 'கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் 'நீர்த்தாரைகள்' எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும்.
பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது நடைபெறும். இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும்.
இதற்கு "டோர்னடோ" என்று பெயர். இதுபோன்ற நிகழ்வுகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிக அளவில் தோன்றும் எனக் கூறியுள்ளார்.