விபத்தில் இறந்த காதலர்கள்; நிறைவேறாத ஆசை...பேய்களுக்கு திருமணம் நடத்திய குடும்பம்!
இறந்துபோன காதலர்களுக்கு அவர்களது குடும்பம் பேய் திருமணம் நடத்தியது வைரலாகி வருகிறது.
இறந்த காதலர்கள்
மலேசிய நாட்டை சேர்ந்தவர் ஜிங்ஷன் என்ற இளைஞர். இவர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் லீ என்ற பெண். இவர்கள் இருவரும் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். ஜிங்ஷன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலியுடன் பாங்காங்கில் திருமண நாளை கொண்டாடவும்,
அந்த பயணத்தின் போது காதலியை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மே மாதம் 24ம் தேதி வடமேற்கு மலேசியாவில் பேராக் பகுதியில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் துரதிர்ஷ்டவசமாக ஜிங்ஷன்- லீ சென்ற கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
பேய் திருமணம்
இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த காதலர்களுக்கு திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டு இருந்த நிலையில், அவர்கள் மரணம் அடைந்தது இருவரின் குடும்பத்தினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், நிறைவேறாத ஆசையில் இறந்த ஜிங்ஷன்- லீயின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, லீ- ஜிங்ஷன் இருவரையும் மறுமையில் கணவன்-மனைவியாக ஒன்றிணைக்கும் வகையில் பேய் திருமணம் என்ற சடங்கை நடத்தி உள்ளன. பேய் திருமணம் என்பது திருமணம் ஆகாத ஆவிகளை இணைக்கும் ஒரு சடங்கு ஆகும்.
அதன்படி, ஒரு மண்டபத்தில் இறந்த தம்பதியின் புகைப்படத்தை வைத்திருந்தனர். அதில் ஜிங்ஷனின் குடும்பத்தினர் லீயை தங்களது மருமகளாக குறிப்பிட்டு அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.