புலியிடம் சண்டையிட்ட நாய் - ஓனரை காப்பாற்றி உயிரைவிட்ட சோகம்!
புலியிடம் சண்டையிட்டு, ஓனரை காப்பாற்றி நாய் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் ஷெப்பர்ட்
மத்திய பிரதேசம், சாத்னா மாவட்ட வனப்பகுதியில் பந்தவ்கார்க் எனும் புலிகள் சரணாலயம் உள்ளது. இதன் அருகே சிவம் பத்கையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நாயுடன் சிவம் பத்கையா வீட்டருகே நடந்துள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று வந்துள்ளது. அடுத்த சில வினாடிகளில் புலி, சிவம் பத்கையாவை நோக்கி தாக்க பாய்ந்துள்ளது.
நெகிழ்ச்சி சம்பவம்
இதனைப் பார்த்த நாய் புலியை நோக்கி சென்று சண்டையிட்டுள்ளது. இதற்கிடையில் சிவம் அங்கிருந்து தப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் புலி, ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை விட்டுவிட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து, நாய் உரிமையாளரின் வீட்டருகே வந்துள்ளது.
அப்போது நாயின் தாடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்துள்ளது. உடனே அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாய் உயிரிழந்தது. இச்சம்பவம் அக்குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் இறுதி சடங்குகளுடன் நாய் புதைக்கப்பட்டுள்ளது.