சீமான் சர்ச்சை பேச்சு; இந்த கோபம் அரசு மீது இருக்க வேண்டும்..காவல்துறை மீதல்ல - காயத்ரி காட்டம்!
இந்த கோபம் அரசு மீது இருக்க வேண்டும் சீமான் சர்ச்சை பேச்சுக்கு காயத்ரி பேசியுள்ளார்.
சீமான் சர்ச்சை பேச்சு
தமிழ்நாடு அரசுக்கு எதிராக சீமான் தலைமையில், நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்தி பாடல் பாடினார்.
அதுமட்டுமின்றி தமது செல்போன் பதிவுகளை போலீசார் ஒட்டுக் கேட்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் ஒருமையில் விமர்சித்தார்.பொது மேடைகளில் பேசக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்தியும் போலீஸ் அதிகாரிகளை சீமான் விமர்சித்துள்ளார்.
மேலும் தம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியுமா? எனவும் சவால்விட்டார். தனது உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேசுகையிலும் பல கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காயத்ரி காட்டம்
இது தொடர்பாக நடிகையும், அதிமுக பிரமுகரான காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பதிவில், "அரசியல் தலைவர்கள் பொது இடங்களில் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசக்கூடாது. அதனால்தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
சமீப காலங்களில் கொடூரமான கொலைகள் போன்ற சில ஆபத்தான சூழ்நிலைகளை காவல்துறை அதிகாரிகள் கையாளுவதை ஏற்கனவே நாம் பார்த்து வருகிறோம். பொது மக்கள் மற்றும் அரசியலமைப்பு நலன்களுக்காக நாம் அவர்களை மதிக்க வேண்டும்.
அவர்கள் தங்கள் வேலையில் அவர்கள் நல்லது அல்லது கெட்டது செய்தாலும் சரி, கோபம் தற்போதைய ஆளும் அரசாங்கத்தின் மீது இருக்க வேண்டும், காவல்துறை அதிகாரிகள் மீது அல்ல. தற்போதைய மாநில அரசால் தான் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அவர்கள் கடுமையாகப் படித்து,
பல போட்டிகளிலும் இந்த நிலையை அடைய கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதிகாரம் மற்றும் பிற சலுகைகளை அனுபவிப்பதற்காக அவர்கள் தேசத்திற்கான தங்கள் சேவையை ஆடு போல பாதி வழியில் விட்டுவிடவில்லை. போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதையை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.