அவர் பேட்டிங் தப்பா இருக்கு; கம்பீர் கூப்பிட்டு பேசுங்க - கவாஸ்கர் அட்வைஸ்
ஜெய்ஸ்வால் தடுமாற்றம் குறித்து கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜெய்ஸ்வால் தடுமாற்றம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவலில் துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடும் இந்தியா முதல் நாள் முடிவில் 204/6 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் வெறும் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். முதல் இரண்டு டெஸ்டில் 4 இன்னிங்ஸில் 220 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்திருந்தார்.
கடைசி மூன்று டெஸ்டுகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், பேட்டிங் செய்யும்போது இந்த ஷாட்டை ஆடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றார்.
கவாஸ்கர் அறிவுரை
திடீரென்று அவர் நம்பிக்கை குறைந்து காணப்படுகின்றார். முதல் டெஸ்டில் சதம் அடித்த பிறகு அவர் பேட்டிங்கில் லாவகமாக விளையாடுவது கிடையாது. இதற்கு காரணம் அவருடைய முன் கால் எப்போதும் போல் ஷாட் ஆடும் போது முன் வருவது இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால் அவர் நிச்சயம் நல்ல வீரர் தான். ஏதேனும் ஒரு மூத்த வீரர் அவருடன் அமர்ந்து சில பேட்டிங் யுக்தி குறித்து பேச வேண்டும். காலை எப்படி எடுத்து வைக்க வேண்டும்? பேட்டிங் செய்யும்போது தோள்பட்டைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினால் நிச்சயம் அது அவருக்கு உதவும்.
தற்போது அவருடைய பின் தோள்பட்டை முதல் ஸ்லிப் அல்லது இரண்டாவது ஸ்லீப்பை நோக்கி இருக்கின்றது. அப்படி இருக்கும் போது அவருடைய பேட் சரியான நேரத்தில் கீழே வந்து நேரடியாக விளையாடுவது கடினமாக மாறிவிடுகிறது. அவருடைய தோள்பட்டை விக்கெட் கீப்பர் திசை நோக்கி இருந்தால் அவருடைய பேட் நேராக ஷாட் அடிக்க ஏதுவாக இருக்கும் என்று அறிவுறுத்தியுள்ளார்.