முதல்முறையாக இந்தியர்... 3ம் இடத்தில் கெளதம் அதானி!
தொழிலதிபர் கெளதம் அதானி உலக பணக்காரர்களின் வரிசையில் 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
கெளதம் அதானி
இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டின் லூயி வுய்ட்டன் நிறுவன தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி 3ம் இடத்தை பிடித்துள்ள நிலையில், முதல் இடத்தில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கும், 2வது பணக்காரராக ஜெப் பெசோசும் இடம்பிடித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும்.
3ம் இடம்
அதானி குழுமம் எரிசக்தி, துறைமுகங்கள், தளவாடங்கள், சுரங்கம், வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் விமான நிலையங்களின் மொத்த சொத்து மதிப்பின் படி ஏனைய நிறுவனங்களின் பங்குகளும் கணக்கெடுக்கப்பட்டு அவருக்கு 3வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரூ.60 ஆயிரம் கோ£ மதிப்பிலான சொத்துக்களை கிராமப்புற இந்தியாவை மேம்படுத்தும் நோக்குடன் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான தொண்டு நடவடிக்கைகளுக்காக அதானி குழுமம் வழங்கி உதவி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அதானிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.