கோலாகலமான சென்னை.. இன்று விநாயகர் ஊர்வலம் - இந்த 4 இடங்களில் சிலை கரைப்பு!
சென்னையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடக்கவுள்ளது.
ஊர்வலம்
தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து பூஜை செய்யப்பட்டது. தற்பொழுது 23-ம் தேதி மற்றும் 24-ம் தேதிகளில் சிலை கரைப்புக்கு போலீசார் அனுமதி வழங்கினர்.
சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில், சிலை கரப்புக்காக 4 கடற்கரைகளிலும் தீயணைப்பு வாகனங்கள், 2 ராட்சத கிரேன்கள், ஒரு சிறிய கிரேன் வாகனங்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரப்பர் படகுகள், முதலுதவி சிகிச்சை பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல் படை மூலம் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊர்வலத்திற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.