குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர்
வீரர்கள் சுற்றுப் பயணத்தின்போது குடும்பத்துடன் இருப்பது குறித்து கம்பீர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுப் பயணம்
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இந்நிலையில், குடும்பத்தினர் வெளிநாட்டு தொடர்களுக்கு வரக்கூடாது என இந்திய அணி நிர்வாகம் போட்ட தடை தான் விராட் கோலி,
ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற காரணம் என்று பேட்டி ஒன்றில் சுரேஸ் ரெய்னா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து புஜாரா கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கம்பீர், "குடும்பம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன ஒரு பெரிய பொறுப்பு இருக்கின்றது. இது ஒன்றும் விடுமுறைக்கான நேரம் அல்ல.
கம்பீர் பேச்சால் சர்ச்சை
நீங்கள் நாட்டுக்காக இங்கு வந்திருக்கிறீர்கள். நாட்டில் கோடிக்கணக்கான பேர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைக்கும் போது அதிலிருந்து ஒரு சிலர் மட்டும் தான் இந்த ட்ரெஸ்ஸிங் ரூமில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய நாட்டுக்கு பெருமையை சேர்க்க மிகப்பெரிய வாய்ப்பு இது.
நான் குடும்பத்தினர் வெளிநாட்டு தொடருக்கு வரக்கூடாது என்று தடையெல்லாம் விதிக்கவில்லை. குடும்பங்கள் நிச்சயம் ஒரு வீரர்களுக்கு தேவையான ஒன்று. ஆனால் உங்களுடைய முக்கிய கவனம் நாட்டை பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான். இதுதான் உங்களுக்கான மிகப்பெரிய பணி.
அந்தக் குறிக்கோளை ஏற்றுக்கொண்டு அதற்காக நீங்கள் உங்களுடைய நேரத்தை செலவிட வேண்டும். மற்றவர்களுக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம். ஆனால் எனக்கு நமது குறிக்கோள் தான் மற்ற அனைத்தையும் விட முக்கியம்" எனத் தெரிவித்துள்ளார்.