தமிழர் பெருமை..ஓலைச்சுவடிகளுக்காகவே ஒரு நூலகம் - எங்க இருக்கு தெரியுமா?
ஓலைச்சுவடி நூலகம் மற்றும் ஆய்வுகள் குறித்து பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
ஓலைச்சுவடி
உலகில் மனித இனம் தோன்றி அவற்றின் படிப்படியான வளர்ச்சியின் காரணமாக மொழிகள் உருவாகின. அதன்படி ,உலகில் தோன்றிய பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி. தனக்குத் தெரிந்தவற்றை அழியாமல் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியதோ அப்போதுதான் எழுத்துவடிவம் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
பனையோலையினால் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகளில் நூல்களை எழுதி வந்தனர். பனையோலையில் எப்பொழுது முதல் எழுதப்பட்டது என்று கூற இயலாது.
பனை யோலைகளில் எழுதுவதற்கு எளிமையாக இருப்பதாலும் அவற்றைச் சரியான முறையில் பராமரித்து வந்தால் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கும் தன்மை கொண்டதாலும் பனையோலைகள் பயன்படுத்தப் பட்டன.
ஆய்வுகள்
தென் கிழக்காசிய நாடுகள் பல ஓலையைப் பயன்படுத்தியிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் முறை தென்னிந்தியாவிலிருந்து பரவியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது என்பதற்குப் பானை ஓடுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை சான்றுகளாக உள்ளன.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் செயின்ட் லூயி வீதியில் பிரெஞ்சு அரசு நிர்வாகத்தின்கீழ் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பிரெஞ்சு அரசு
இந்த அலுவலகத்தில் இயற்கையையும், பண்பாட்டையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள், துறை வல்லுநர்கள், பணியாளர்கள் என சுமார் 60 பேர் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் தமிழர்களின் தொன்மையையும், பாரம்பரிய பெருமைகளையும் பாதுகாக்கக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரெஞ்சு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் ஓலைச் சுவடிக்கு என்றே ஒரு நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
அந்த நூலகத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிக் கட்டுகளைப் பாதுகாத்து வைத்துள்ளனர். குறிப்பாக இந்த ஓலைச்சுவடிகள் சைவ, ஆகம விதிகள் குறித்து அதிக அளவில் எழுதப்பட்டவையாக உள்ளது.
இதிகாசம் புராணங்கள் குறித்தும் ஓலைச்சுவடிகள் குறைந்த அளவில் காணப்படுகின்றனர்.
மேலும் இங்கு பெரும்பாலாக தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, நந்தி நாகரி மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி கட்டுகள் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.