விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி - ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றிய கும்பல்!
விஜயகாந்த் மைத்துனரான சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
ரூ.43 கோடி மோசடி
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ். இவர் தேமுதிகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், இவரது மனைவியான பூர்ண ஜோதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.
அதில், ‘‘தனக்கும் தனது கணவருக்கும் சொந்தமாக சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் சுமார் 2.10 ஏக்கர் காலியிடம் இருந்தது. அதில், அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்காக சென்னையிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா (44) என்பவரின் நிறுவனத்துடன் 2014-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தோம்.
இருவர் கைது
அதன்படி, மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான தனக்கும், 156 வீடுகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில் தனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை தனக்கு தெரியாமல், தனது கையெழுத்தை போலியாக போட்டு சந்தோஷ் சர்மாவின் கட்டுமான நிறுவனம் வெளி நபர்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் சுமார் ரூ.43 கோடி மோசடி செய்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரான அடையாறு கற்பகம் கார்டன், 1வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா, அந்நிறுவனத்தின் மேலாளர்சென்னை ஷெனாய்நகர் ராஜம்மாள் தெருவைச் சேர்ந்த சாகர் (33) மற்றும் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவல்கள் உண்மை என தெரியவந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் சந்தோஷ் சர்மா,சாகர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில், சந்தோஷ் சர்மா ஒரேவீட்டை பலருக்கு விற்று பண மோசடி செய்ததாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.