4 பேர்.. 4 நிமிடம்; ரூ.900 கோடி நகைகள் மாயம் - அதிரவைத்த சம்பவம்!
சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
லூவர் அருங்காட்சியம்
பிரான்ஸின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது லூவர் அருங்காட்சியம் (Louvre Museum). இங்கு கடந்த ஞாயிறு அன்று நுழைந்த கொள்ளையர்கள் வெறும் 4 நிமிடங்களில்
அங்கிருந்த விலைமதிப்பற்ற மாமன்னன் நெப்போலியனின் 8 நகைகளைக் கொள்ளையடித்தனர். இந்த அருங்காட்சியகத்தை பார்வையாளர்களுக்காக காலை 9 மணிக்கு திறப்பார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அருங்காட்சியகத்தின் 2-வது தளத்தில் உள்ள அப்பல்லோ கேலரியில் தான் நெப்போலியனின் அந்த விலைமதிப்பற்ற நகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இரண்டாவது தளத்தை அடைய ட்ரக்கில் பொருத்தப்பட்டிருந்த ஏணியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
நகைகள் கொள்ளை
டிஸ்க் கட்டர் எனப்படும் மரம் அறுவை இயந்திரத்தைப் பயன்படுத்தி ஜன்னல் சட்டத்தை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்து 8 நகைகளைக் கொள்ளையடித்தனர். கூடவே 3-வது நெப்போலியன் மன்னரின் மனைவி பேரரசி யூஜினின் கிரீடத்தையும் திருடியுள்ளனர்.
ஆனால், அந்தக் கிரீடம் அருங்காட்சியகத்துக்கு அருகிலிருந்த இடத்திலேயே மீட்கப்பட்டது. 4 பேர் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
நன்கு திட்டமிட்டு துணிச்சலாக காலை வேளையில் இந்தக் கொள்ளையில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இன்னும் அந்தக் கொள்ளைக் கும்பல் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.