இதனால்தான்... சைரஸ் மிஸ்திரி மரணம் - விசாரணையில் தகவல்! யார் இவர்?
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் இறந்ததற்கான காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சைரஸ் மிஸ்திரி
1991-ம் ஆண்டு ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தில் சைரஸ் மிஸ்திரி இயக்குநராக பொறுப்பேற்றார். டாடா குழும இயக்குநர் குழுவில் இடம்பெற்றிருந்த இவரது தந்தை ஓய்வு பெற்றதை அடுத்து, 2006-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.

ரத்தன் டாடா ஓய்வு பெற்றதை அடுத்து 2012-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மிஸ்திரி நியமிக்கப்பட்டார். டாடா குடும்பத்தின் நேரடி வாரிசு இல்லாத ஒருவர் டாடா குழுமத்தில் தலைமைப் பொறுப்பேற்றது அதுவே முதல்முறை.
விபத்தில் மரணம்
ஆனால், 2016-ம் ஆண்டு அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சைரஸ் மிஸ்திரி நேற்று அகமதாபாத்தில் இருந்து காரில் மும்பை திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மகாராஷ்டிரா, பால்கரில் சாலைத் தடுப்புச்சுவரில் அவர் வந்த பென்ஸ் கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலே சைரஸ் மிஸ்திரி(54) உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த மேலும் இருவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர்.
விசாரணை
படுகாயமடைந்த இருவரும் குஜராத் மாநிலம் வாபியில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சைரஸ் மிஸ்திரிக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில்,
காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை எனவும் முன் இருக்கையில் இருந்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.