இயற்கையின் அதிசய காட்சி...திருமால் உருவம் தெரியும் மலை - எங்குள்ளது தெரியுமா?
பெருமாள் படுத்திருப்பதைபோல் பிரதிபலிக்கும் மலை குறித்து இந்த பதிவில் காணலாம்.
திருமால் உருவம்
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செண்பக தோப்பு வனப்பகுதி.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் அந்த வனப்பகுதியில் அங்குள்ள மீன் வெட்டி அருவியை கடந்து ஒரு 2 கி.மீ நடந்து சென்றால் காட்டழகர் கோவிலை சென்றடையலாம்.
அடர்ந்த வனப்பகுதியில் மலை மீது அமைந்துள்ள இந்த காட்டழகர் கோவிலின் பின்புறம் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் முகடுகள் பள்ளிகொண்ட பெருமாள் இருப்பதை போல பிரதிபலிப்பதை காணலாம். இந்த மலை பெருமாள் போன்று காட்சியளிப்பதால் மக்கள் அதனை பெருமாள் மலை என்று அழைக்கின்றனர்.
ஆண்டாள் கோவிலோடு சேர்ந்த இந்த காட்டழகர் கோவிலில் மூலவராக சுந்தராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார்.இந்த நிலையில், கோவிலின் பின்புறம் உள்ள மலை பெருமாளை போன்று இருப்பதால் மக்கள் இதனை அதிசயமாக பார்த்து வணங்குகின்றனர்.
மலை எங்குள்ளது?
தொன்று தொட்ட காலத்தில் இருந்தே இயற்கையை வணங்குவது என்பது நமது மரபாக இருந்து வருகிறது. இங்கு இயற்கையை கடவுளை பிரதிபலிக்கும் வகையில் அமைத்திருப்பது தான் ஆச்சரியம்.அதுமட்டுமின்றி, வைணவ திருத்தலமான இந்த கோவிலின் பின்புறம் வைணவ கடவுளின் உருவம் இயற்கையாக அமைந்திருப்பது,
கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது. இந்த அதிசய மலை உள்ள செண்பக தோப்பு வன்பொருள் நாம் எல்லா நாட்களிலும் செல்ல முடியாது. வனத்துறை இங்கு செல்ல சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை பத்து மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே வனத்திற்கு செல்ல அனுமதி. மேலும் அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் தனியாக செல்வதை தவிர்த்து, குழுவாக செல்வது சிறப்பு.