பிரமிக்க வைக்கும் பொதிகை மலையின் அழகையும், சிறப்பையும் அறிவோம்!
"பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் " , " தென் பொதிகை வைகை நதி " , "பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா" இவைகளெல்லாம் பல்வேறு காலங்களில் வெளியாகிய தமிழ் சினிமா பாடல்களின் முதல் வரி என்பது உங்களுக்கே தெரியும்.
இப்படி பொதிகை மலையின் பெருமையையும், அழகையும் பறைசாற்றும் விதமாக இடம்பெற்ற வரிகள் தமிழ் சினிமா பாடல்களில் ஏராளம்.
இந்த பொதிகை மலை மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தென்பகுதியில் ஆனைமலைத்தொடாில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி - கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. பொதிகை மலையின் சிறப்புகள் பொதிகை மலை இந்தியாவின் பழமையான மலை என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.
இமயமலை மற்றும் விந்திய மலையுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக பழமையான மலை என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும்.
இந்த மலையில்தான் தென்றல் தோன்றுகிறது. சந்தன மரங்களில் படிந்து வீசும் தென்றல் காற்று, மனித உடம்புக்கு நோய் தீர்க்கும் அருமருந்து. சிவபெருமானே கூத்தாடும்போது தென்றல் வீச வேண்டி பொதிகை மலையை நோக்கி முகத்தை வைத்துதான் நடனமாடினார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பொதிகை மலை கடல் மட்டத்தில் இருந்து 1890 அடி உயரத்தில் உள்ளது. அகத்திய முனிவர் தவம் செய்த இடமான அகத்தியர் கூடத்துக்கு வருடந்தோறும் கேரள அரசு அனுமதி அளித்து வருகிறது.
பொதிகை மலை குறித்து தற்போது ஊடகங்களும் சமூக வளைத் தலங்களும் அதிகமான செய்திகளை வெளியிட்டு, சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை என கூறுவதால் இங்கு செல்ல பக்தர்கள் அலைமோதுகிறார்கள்.
2 ஆயிரத்திற்கும் (2000) மேலான மருத்துவ குணமுடைய அறிய வகை மூலிகைகள் நிறைந்த பகுதியாக பொதிகை மலை அறியப்படுகிறது.
குறிப்பாக உலகின் மிக மிக அரிதான 50 வகையான மூலிகை செடிகள் இங்கேதான் உள்ளது. தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி பொதிகை மலையில் தான் உற்பத்தியாகிறது.
அகத்தியர் சிலை
பொதிகை மலையின் உச்சியில் தான் அகத்தியர் தமிழ் வளர்த்ததாக கதைகளில் கூறப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் அகத்தியருக்கு ஒரு கோவிலும் உள்ளது. பொதிகை மலையில் அகத்தியரின் சிலை, பீடம், குகை உள்ளது.
இவை தற்போது வழிபாட்டு ஸ்தலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு சித்தர்கள் மட்டுமின்றி சித்தர் வழிபாட்டினரும், ஆன்மீக நம்பிக்கை கொண்ட மக்களும் சென்று வழிபட்டு வருகின்றனர்.
பொதிகை மலையிலிருந்து 30 கி.மீ.,தூரத்தில் 7 ஆயிரத்து 500 அடி உயரத்தில் திரிகூட மலையில் செண்பகாதேவி அருவிக்கு மேலே உள்ளது.
இப்பகுதியில் தட்சிணாமூர்த்தி குகை, ஜோதீஸ்வரர் குகை, கரடி குகை, பரதேசி குகை, அகத்தியர் கோவில், அகத்தியர் பாதம், அகத்தியரின் முதல் சீடரான புலத்தியரின் சமாதி போன்றவை உள்ளன. அகத்தியர் வழிபட்ட பாலவிநாயகர் சிலை மூன்றரை அடி உயரத்தில் இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பண்டைய தமிழ் எழுத்துக்கள்
இங்குள்ள பாறைகளில் விநாயகரை சித்தர்கள் வழிபடுவது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அகத்தியர் பயன்படுத்திய பண்டைய தமிழ் எழுத்துக்களின் கல்வெட்டுகள் இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மேலும் சேர, பாண்டிய மன்னர்கள் கட்டிய மிகவும் தொன்மையான கட்டடம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகிறது.