கூகிள் மேப் பார்த்து உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர் - இறுதியில் நேர்ந்த சோகம்
கூகிள் மேப் பார்த்து உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞரை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டுள்ளனர்.
கூகிள் மேப்
வழி தெரியாத இடங்களுக்கு செல்பவர்களுக்கு கூகிள் மேப்(Google Map) ஒரு வரப்பிரசாதம். எந்த பாதை வழியாக செல்லலாம் எவ்வளவு நேரம் ஆகும் என அணைத்து தகவல்களையும் வழங்கி விடும்.
ஆனால் ஒரு சிலருக்கு கூகிள் மேப் தவறான வழியை காட்டி உயிரிழப்பை கூட ஏற்படுத்தியுள்ளது. இதே போல் சென்னையில் கூகிள் மேப்பை பார்த்து சென்ற ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
உணவு டெலிவரி
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பவுன்ராஜ்(25) என்பவர், தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு சுமார் 11.20 மணியளவில் துரைப்பாக்கத்தில் உள்ள விஜிபி அவின்யூவில் உள்ள வீட்டுக்கு உணவு டெலிவரி செய்ய கிளம்பினார்.
உணவு டெலிவரி செய்யும் இடத்திற்கு செல்ல செல்போனில் கூகிள் மேப்பை பார்த்தபடி சென்றுள்ளார். இருள் சூழ்ந்த பகுதியில் கூகிள் மேப் கட்டிய வழியில் சென்ற பவுன்ராஜ், மோட்டார் சைக்கிளுடன் சதுப்பு நில சேற்றில் சிக்கியுள்ளார்.
சேற்றில் சிக்கிய சோகம்
அதிலிருந்து மீள முடியாத பவுன்ராஜ் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரை காப்பாற்ற அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாத நிலையில் 112 என்ற கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
உடனே துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் அவரின் இருப்பிடத்தை கேட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த பவுன்ராஜையும் அவரது மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.
மரண பயத்தில் இருந்த பவுன்ராஜ், உயிரை காப்பற்றிய தீயணைப்பு வீரர்களை கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டார். அதன் பிறகு அவருக்கு தண்ணீர் கொடுத்து சிறிது நேரம் இளைப்பாற வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.