பூனை பிரியர்களே உஷார், வேகமாக பரவும் தொற்றுநோய் - WHO எச்சரிக்கை!
பூனைகளில் இருந்து தொற்றுநோய் வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு
கடந்து சில நாட்களாக போலந்து நாட்டில் பூனைகள் அதிகளவில் இறந்துவிட்டது. இது குறித்த ஆய்வு நடத்திய உலக சுகாதார அமைப்பு, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பறவைக் காய்ச்சல் அல்லது H5N1 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பறவைக் காய்ச்சல் பொதுவாக வீட்டு விலங்குகள் அல்லது பாலூட்டிகளுக்கு பரவாது. ஆனால் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த காட்டுப் பறவைகளை உட்கொள்வது அல்லது அசுத்தமான சூழலில் இருப்பது ஆகியவை காரணமாக பூனைகளுக்கு தொற்று நோய் பரவலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பூனைகள் வலிப்பு போன்ற நரம்பியல் அறிகுறிகளை காட்டியதாகவும், கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இந்நிலையில், பாலூட்டிகளுக்கு இடையே பரவி வரும் இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு எளிதில் பரவுவதற்கு உதவுகிறது என்றும், பாலூட்டிகளில் H5N1 வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆபத்தானது என்றும் WHO தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், மூன்று கண்டங்களில் உள்ள சுமார் 10 நாடுகளில் பாலூட்டிகளில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்புக்கு (WOAH) தெரிவித்துள்ளது. தற்பொழுது அதிகமானோர் பூனைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர், அதற்கு இந்த பறவை காய்ச்சல் வந்தால் மனிதர்களுக்கு எளிதில் பரவ கூடும் அதனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.