பிரியாணியில் பூனைக்கறி...சென்னையில் மட்டனுடன் கலந்து விற்கப்படும் பூனைக்கறி
சென்னையில் மட்டனுடன் சேர்த்து பூனைக்கறியும் விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளரும் டிஜிட்டல் யுகம்
இன்றைய டிஜிட்டல் கால கட்டத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தங்களுக்கு தேவையானதை வாங்கும் பழக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் என்பது இன்றைய தலைமுறையினரிடம் வெகுவாக வளர்ந்து வருகிறது.
இதனால் ஹோட்டலில் சாப்பிடுவதால் பலருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருந்து வருகிறது. சென்னையில் ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் மட்டன் கறியுடன் பூனைக்கறி கலந்து விற்கப்படுவதாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பூனைகளை பிடித்து விற்பனை
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே சிலர் பூனைகளை பிடித்து வலையில் அடைத்து வைத்திருந்துள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த சவுகார்பேட்டை விலங்குகள் நல ஆர்வலர் புஷ்பராணி இது குறித்து ஏழு கிணறு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று பூனைகளை வைத்திருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 பூனைகளை கைப்பற்றிய போலீசார் திருவள்ளூரில் இயங்கி வரும் விலங்கு நலப் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. அதாவது பல வீடுகளில் ஆசையாக வளர்க்கப்படும் பூனைகளை உரிமையாளர்களே தெரியாமல் வலை வைத்து பிடிப்பதே இந்த இருவரின் வேலை.. பூனைகளைப் பிடிக்கும் இவர்கள், அதைக் கொன்று தோலை உரித்து மட்டன் இறைச்சியுடன் கலந்து விற்றுவிடுவார்களாம்.
அதிகாலை நேரத்தில் அவர்கள் பூனைகளை உரிமையாளர்களுக்குத் தெரியாமல் பிடித்து வந்ததும் அம்பலமானது. இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அயனாவரம், சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு இவர்கள் பூனை இறைச்சியை விற்றுள்ளனர்.
பிரியாணிகளில் பூனைக்கறி
அதேபோல பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தையிலும் இவர்கள் பூனை இறைச்சியை அதிகம் விற்றுள்ளனர். இவர்களிடம் இருந்து வாங்கும் பூனை கறியை மட்டனுடன் மிக்ஸ் செய்து கோலா உருண்டை, மட்டன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.
பூனை இறைச்சியும் மட்டன் கறியும் கிட்டதட்ட ஒரே பதத்தில் இருப்பதால் மட்டனுடன் பூனை இறைச்சியை மிக்ஸ் செய்யும் போது, அதைக் கண்டுபிடிப்பது கஷ்டமாகிவிடுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும், இதேபோல சென்னையில் பல்லாவரத்தில் பூனை கறி விற்கப்படுவது கண்டறியப்பட்டது.
அங்குப் பல பூனைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. சாலையோர வியாபாரிகளுக்கு அது விற்பனை செய்யப்பட்டது. இப்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.