கூடங்குளத்திற்கு ஜெனரேட்டர் ஏற்றிவந்த இழுவை கப்பல் - பாதியில் பாறையில் சிக்கியதால் பரபரப்பு!
கடல் வழியாக ஜெனரேட்டர் ஏற்றிவந்த இழுவை கப்பல் பாதியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அணுமின் நிலையம்
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது, அங்கு தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 3, 4-ம் அணு உலைக்கான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது.
இந்த அணு உலைகளில் பயன்படுத்தப்படும் 2 நீராவி ஜெனரேட்டர் எந்திரங்கள் ரஷியாவில் இருந்து கடல் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மிதவை கப்பலில் 2 நீராவி ஜெனரேட்டர்களும் ஏற்றப்பட்டன. அது மிதந்தபடியே இழுவை கப்பல் இழுத்து செல்லும்.
பாறையில் சிக்கிய கப்பல்
இந்நிலையில், அந்த கப்பல் கூடங்குளத்திற்கு ஒரு மைல் தொலைவில் வந்துக் கொண்டிருந்தபொழுது திடீரென மிதவை கப்பலுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் மிதவை கப்பல் அலையில் அடித்து சென்று பாறையை தட்டி நின்றது. 2-வது நாளாக இன்றும் மிதவை கப்பலை மீட்கும் பணியில் அணுமின் நிலைய ஊழியர்கள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை மீட்பதற்கு வல்லுநர்கள் குழு பல வழிகளை பரிந்துரைத்து வருகிறது.