முதல்வரின் பிரசார ஜெனரேட்டர் வாகனத்தில் தீ விபத்து!
தம்மம்பட்டியில் முதல்வரின் பிரசார நிகழ்ச்சிக்கு கொண்டு வரப்பட்ட ஜெனரேட்டர் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பானது. தமிழக தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரசார கூட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது, தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் இன்று சேலம் மாவட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார். தம்மம்பட்டியில் கூட்டம் நடைபெறுவதற்காக சுப்ரமணியர் சாமி கோவில் முன்பாக மேடை அமைக்கும் பணி நடைபெற்றது.
இதற்காக சேலத்தில் இருந்து, ஈசர் லாரியில் பொறுத்தப்பட்ட பெரிய ஜெனரேட்டர், வியாழக்கிழமை மாலை கொண்டு வரப்பட்டு, பேருந்து நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பாஃர்மர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. இரவு 8 மணியளவில், திடீரென அந்த ஜெனரேட்டர் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பத்துக்கும் மேற்பட்ட லோடு ஆட்டோக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. அரை மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீயை அங்கிருந்தவர்கள் அணைக்க போராடினர்.
அவர்கள் முயற்சி பலன் அளிக்காத நிலையில், ஈசர் வாகனத்தில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பெரிய ஜெனரேட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு நெருப்பும் அணைக்கப்பட்டது, இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.