அமலுக்கு வந்த பாரதிய நியாய சன்ஹிதா; சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு - என்ன காரணம் தெரியுமா?
புதிய குற்றவியல் சட்டம் இன்று (ஜூலை 1) அமலுக்கு வந்த நிலையில், சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய குற்றவியல் சட்டம்
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட, இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா போன்ற புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்காக, திங்கட்கிழமை அதிகாலை 12:15 மணிக்கு மத்திய டெல்லியில் சாலையோர வியாபாரி பொதுமக்களுக்கு இடையூறாக கடை அமைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்பவர், சாலையில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குட்கா விற்பனை செய்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது புதிய குற்றவியல் கோட் பிரிவு 285ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்ஐஆர் படி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு பாலத்தின் கீழ் பங்கஜ் தனது கடையை நேற்றிரவு நிறுத்தியதாகக் கூறுகிறது.
அந்த நபர் தண்ணீர், பீடி, சிகரெட் விற்பனை செய்து வருவதால், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்துள்ள நிலையில், கடையை சாலையில் இருந்து அகற்றுமாறு சப்-இன்ஸ்பெக்டர் பலமுறை கேட்டும், அவர் ஏற்கவில்லை. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இ-பிரமன் அப்ளிகேசனை பயன்படுத்தி வீடியோவை எடுத்து அதன் மூலம் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்கு, ஐயாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.