"உயிர் போகும் என தெரிந்தே அடித்துள்ளனர்" - அஜித் மரண வழக்கில் திருப்பம்
அஜித் மரண வழக்கில் எஃப்.ஐ.ஆரில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
அஜித்குமார் மரணம்
சிவகங்கை,மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் நகை காணாமல் போனது தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரில்
தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
எப்.ஐ.ஆரில் திருத்தம்
பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தொடர் விசாரணையில் மடப்புரம் கடையில் மிளகாய்பொடி வாங்கி, அதை அஜித்குமார் மீது துாவி சித்ரவதை செய்ததாக போலீசார் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில், வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் மரணித்ததாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால்
தனிப்படை காவலர்கள் 5 பேர், அஜித் குமார் உயிர் போகும் எனத் தெரிந்தே அவரை கடுமையாக அடித்ததாக எப்.ஐ.ஆரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.